Tuesday, May 31

தென் கிழக்கு பல்கலையில் விரைவில் பொறியியல் பீடம்



தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்துள்ளதாக, பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

  உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கதென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இன்று திங்கட்கிழமை  விஜயம் செய்த போதே இந்த உறுதியை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

பொறியியல் பீடத்தை ஆரம்பிப்பதற்கான தேவையான சகல உதவிகளையும் குவைத் அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் கலாநிதி இஸ்மாயில் தெரிவித்தார்.

தென் கிழக்கு  பல்கலைக்கழகத்திலுள்ள தொழில்நுட்ப பிரிவை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் வெற்றிடமாகவுள்ள சில பதவிகளுக்கான நியமனங்களை இன்றைய விஜயத்தின்போது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வழங்கியதாக கலாநிதி இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தென் கிழக்கு  பல்கலைக்கழகத்தில், வர்த்தக முகாமைத்துவ பீடம், கலை பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கைகள் ஆகிய பீடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment