Saturday, October 22

ஹரீஸ் எம்.பிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிடம் அக்கட்சியின் அதியுயர் பீட உறுப்பினரான சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பிலான கடிதமொன்றை சட்டத்தரணி பாயிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு ஒக்டோபர் 20ஆம் திகதி அனுப்பியுள்ளார்.


குறித்த கடிதத்தில், "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பாருக்கு ஆதரவு வழங்க கல்முனைக்கு சென்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸினால் கல்முனை அல் - சுஹரா வித்தியாலயத்திற்கு அருகில் அச்சுறுத்தப்பட்டேன்.

அச்சந்தர்ப்பத்தில் முறையற்ற வார்த்தைகளினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அச்சுறுத்தியதுடன் நான் அவரின் கோட்டையான கல்முனையில் இருப்பதால் அவர் நினைத்தால் எதையும் எனக்கு செய்ய முடியும் என அச்சுறுத்தினார்.

இதற்கு கல்முனை அல் - சுஹரா வித்தியாலயத்தில் வாக்களித்து விட்டு வந்த பொதுமக்கள் சாட்சியாக உள்ளனர். அத்துடன் அவர் என்னை அச்சுறுத்திய பின்னர், நான் அச்சுறுத்தியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிந்தது.

எனவே, இவ்வாறு கட்சியின் ஒழுக்கங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மீறுவது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இக்கடித்தின் பிரதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தல் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸை சட்டத்தரணி பாயிஸ் அச்சுறுத்தியதாகவும் சட்டத்தரணி பாயிஸை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அச்சுறுத்தியதாகவும் இரு முறைப்பாடுகள் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment