Wednesday, May 9

தென்னிலங்கை மீனவர்களுக்கு உதவிய கல்முனை சட்டத்தரணிகள் மீது கண்டனத் தீர்மானம்!

தென் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி வலைத் திருடர்களை பிணையில் செல்வதற்கு உதவிய கல்முனைமாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகளுக்கு எதிராக சாய்ந்தமருதில் கண்டனப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடற்றொழில் திணைக்களம் தயாரில்லை என்ற குற்றச்சாட்டும் அங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் மன்ற கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற போதே மேற்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அல்-ஹாஜ் அஸ்லம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பதில் பிரதேச செயலாளர் எம்.வை. சலீம், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டப்ள்யூ. வசந்த குமார, கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர், சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்-ஹாஜ் மௌலவி. எம்.ஐ.ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவ சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக அரசாங்கத்தால் வழங்கப்படும் எரிபொருள் மானிய முத்திரையினை வழங்குவதில் அம்பாறை மாவட்ட கடற்றொழில் திணைக்களம் மிக இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுவதுடன் மீனவர்களின் நலன்களில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பல மீனவர்கள் தங்களது எரிபொருள் மானியத்தை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.
எரிபொருள் மானியம் வழங்கப்படும் தென்பகுதி மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட ஏனைய மாவட்ட மீனவர்கள் மிக இலகுவான முறையில் தங்களது மானியங்களை பெற்றுக் கொள்கின்றனர். மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி அறிவு குறைந்தவர்கள். அதனைக் கருத்திற் கொண்டு திணைக்கள அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பல வருடங்களாக எமது பிரதேசத்தில் படகுகளின் வலைகள் திருடப்பட்டு வந்துள்ளன.திருடப்பட்ட வலைகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட வரலாறுகள் இல்லை. ஆனால் அண்மையில் எமது பிரதேச படகு ஒன்றிலிருந்து திருடப்பட்ட வலைகள் மாத்தறை பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதுடன் அத்திருட்டுடன் தொடர்புடைய நால்வரை கல்முனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். அவர்களை பிணையில் செல்ல விடக்கூடாது என்பதற்காக பல முயற்சிகளை எடுத்தோம்.
ஆனால் எமது கல்முனை மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள் சிலர் பணத்துக்காக பிணையில் செல்வதற்கு உதவினார்கள். எனவே இவ்விடயத்திற்கு உதவிய கல்முனை சட்டத்தரணிகளுக்கு எதிராகவும் இக்கூட்டத்தில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இவ்வலைத் திருட்டு நடவடிக்கையினால் இன முறுகல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எதிர்காலத்தில் இவ்வாறான வலைத் திருட்டு நடவடிக்கைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தென்பகுதி மீனவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்துதல் என தீர்மானக்கப்பட்டது.
மேலும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மூவின மதத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவை சந்தித்து இப்பிரச்சினைகள் குறித்து எடுத்துரைப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment