Friday, March 29

அஸாத் சாலிக்கு இருக்கும் தைரியம் ஏன் முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லை - ரஸ்ஸாக் (ஜவாத்) கேட்கிறார்.

எந்தவித அதிகாரமும் அற்ற அசாத் சாலிக்கு இருக்கும் தைரியங்களும், உணர்வுகளும் ஏன் முஸ்லிம் தலைமைகள் என்று கூறி தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இல்லை  என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.சி.யுனைட் தலைமையில் கல்முனையில் நடைபெற்றன. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தமக்கிடையிலான உறவை பலமடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வழிபிறக்கும்.

முஸ்லிம் சமூகமே சிந்திக்கும் தருணம் வந்துவிட்டது. யாரையும் நம்பி பயனில்லை. நாமே நமது உரிமைகளைக் காக்க களத்தில் இறங்க வேண்டிய வேளை வந்துவிட்டது. இன்னும் கொஞ்ச காலம் போனால் உங்கள் குடும்ப விடயங்களில் கூட பொது பல சேனா மூக்கை நுழைத்து ஆராயும்.

ஜெனிவாவில் இலங்கை முஸ்லிம்களுக்கு எந்த வேதனைகளும் இல்லையென பாகிஸ்தானும், இந்தோனேசியாவும் எடுத்துக்கூறுகின்ற அளவுக்கு எமது நாட்டில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அநியாயங்கள் மூடி மறைக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள முஸ்லிம்களை வெளியேற்றும் பாரிய திட்டம் என்றும், முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றதென்றும் நாடாளுமன்றத்தில் கூறும் போது நமது முஸ்லிம் கட்சிகள் இல்லை. அது பொய் என கூறுகின்றது.

எந்தவித அதிகாரமும் அற்ற அசாத் சாலிக்கு இருக்கும் தைரியங்களும், உணர்வுகளும் ஏன் முஸ்லிம் தலைமைகள் என்று கூறி தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இல்லை.
இனியும் மெளனம் சாதிப்பதானால் மக்களுக்கான கடந்த 1986 தொடக்கம் எதிர்பார்ப்புகளுடன் தியாகத்துடன் ஈடுபட்ட அந்த வரலாறுகளை பொய்ப்பிப்பதா? கட்சி அரசியலுக்கப்பால் நாம் சமூக உணர்வுடன் சிந்திக்க வேண்டும்.

தமிழர்களுடன் அன்றும் இன்றும் என்றும் வாழப் போகின்ற முஸ்லிம்கள் தமிழ்த் தலைவர்களுடனான இணக்கப்பாட்டு அரசியலை தொடர்வதனால் மாத்திரமே ஒரு வக்கிரம்மிக்க பெரும்பான்மை இனத்தின் கீழ் தமது உரிமைகளையும், பாதுகாப்பினையும் தேட முடியும் என்ற அடிப்படையில் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நிறுவியிருக்க வேண்டும். இந்நிறுவல் திவிநெகும சட்டமூலம் மூலம் நாம் இழந்த சுமார் ஐம்பது சதவீதமான அதிகார உரிமைகளை தடுத்திருக்கும். இல்லையேல் அரசுடன் இணைவதால் கட்சி தாவல்களில் சிக்கியிருக்கும் உறுப்பினர்களை காப்பாற்றும் நிலை இருந்தாலும் அங்கேயும் முதலமைச்சர் என்ற பதவியை ஒரு வரலாற்று அடையாளமாக நிறுவியிருக்கலாம்.

அரசுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து இதுவரை ஆன பலன் என்ன? தனிப்பட்ட மக்கள் உறுப்பினர்கள் மந்திரி பதவிகளை மையமாகக் கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயங்குகின்றது என்று ஊடகங்களில் கூறும் போது மெளனிகளாக நாம் ஏன் இதனை ஏற்க வேண்டும்.

தமது இயலாமையை மறைப்பதற்காக நாட்டுத் தலைவர்களில் பழியை சுமத்தும் சூட்சுமங்கள் என்ன? எனவே உடனடியாக மக்கள் வழங்கிய அமானிதங்களை சுமக்கும் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த அரசுக்கு கொடுக்கும் ஆதரவினை உடனடியாக நிறுத்தி, அமைச்சுப் பதவிகள் அனைத்தையும் இராஜினாமா செய்து எமக்கிருக்கும் ஜனநாயக மீறல்களையும் தாக்கங்களையும் உலகிற்கு உணர்த்த வேண்டும். இவ் உணர்த்தல் வாக்களித்த மக்களுக்கு ஓரளவேனும் ஆறுதல் அளிக்கும் என்றார்.

No comments:

Post a Comment