Thursday, March 28

மதங்கள் மீதான ஒருசிலரின் மனவருத்தமே மதக்குரோதங்களுக்கு காரணம் - கல்முனை விகாராதிபதி



இன, மத பேதமின்ற பல வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த சிங்கள, முஸ்லிம்களிடையே தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு காரணம் தங்களது மதங்கள் குறித்தான ஒருசிலரின் மனவருத்தமே என்று கல்முனை சுபத்திராம ராம மகா விகாரையின் விகாராதிபதியும் அம்பாறை மாவட்டத்தின் சர்வம சம்மேனத்தின் உபதலைவரும் சமதானத்திற்கான பேரவையின் அம்பாறை மாவட்ட உபதலைவருமான ரன்முத்துகல சங்கரத்ன தேரர் துருவம் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; தங்களது மதத்தின் மீதுள்ள மனவருத்தத்தினால்  வீதிக்கு வந்து மத்த மதங்களைப் புண்படுத்தி போராடுவதற்கு நாங்கள் தயாராகவில்லை. இவர்கள் தங்களது மதங்கள் குறித்து மனவருத்தப்படத் தேவையில்லை. தங்களது மதத்தை மதித்து, மற்ற மதத்துக்கும் மதிப்பளித்து போராட்டத்தில் ஈடுபடாமல் நாட்டில் ஒற்றுமையாக வாழவேண்டும். 
இலங்கை ஒரு பெளத்த நாடு. இதனைக் காப்பாற்றுவது பெளத்தர்களின் கடமையாகும். ஆனால், இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டும் இதர மதத்தவர்களும் அவர்களது மதங்களை பாதுகாக்க வேண்டும். அது அவர்களது உரிமை. இலங்கையில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களைப் பாதுகாப்பதற்கு உரிமை இருக்கின்றது. அதற்காக, தங்களது மதத்தைப் பாதுகாப்பதற்காக ஏனைய மதங்களை குழப்பி, அவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதனை பெளத்தமதம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
ஜனநாயக நாட்டில் இனத்தைக் குழப்பி, மதத்தைக் குழப்பி அதனூடாக தீர்வுகாண முற்படக்கூடாது. நான் ஒரு பெளத்த தேரர் என்ற வகையில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளை நினைத்து வருந்துகிறேன். முஸ்லிம்கள் எல்லாவற்றையும் மறந்து நாட்டின் நலனை கருத்திற்கொண்டு எல்லோரும் ஒற்றுமையாக வாழ வழிசமைக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படுமிடத்து எல்லா மதத் தலைவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து அதற்கான தீர்வு குறித்துப் பேசவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
(முஹம்மட் பிறவ்ஸ்)
 
நன்றி: துருவம் 

No comments:

Post a Comment