Wednesday, April 3

கிழக்கில் பொதுபல சேனாவின் சூழ்ச்சிகளை பலிக்க விடமாட்டோம் ; நஸீர்


கிழக்கு மாகாணத்தில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு செயற்பட விட மாட்டோம். முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய இனங்களுக்குமிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. அவர்களின் சூழ்ச்சிகள் பலிக்க விடமாட்டோம்.
இவ்வாறு கூறினார் விவசாய கால்நடை, உற்பத்தி அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட்.
 
கிழக்கு மாகாணத்தில் மூன்று சமூகங்களும் ஐக்கியமாக வாழும் ஒரு சூழ்நிலையில் பொதுபல சேனா ஹெல உறுமய போன்ற இலக்கில்லா அமைப்புக்களின் சூழ்ச்சிகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கிழக்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள் இடமளிக்க விடவும் மாட்டோம்.
கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக இருந்தாலும் வடகிழக்குக்கு வெளியே, வாழும் முஸ்லிம் சமூகத்தை கருத்திற் கொண்டே செயற்பட வேண்டும். செயற்பட வேண்டியிருக்கிறது.
பெருந்தொகை வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்று இயங்கி வரும் பொதுபலசேனா இவ்வமைப்புக்களுக்கு நோர்வே, இஸ்ரவேல் போன்ற நாடுகள் நிதி உதவி நல்கிவருகின்றன. இதற்கு பல ஆதாரங்கள் உண்டு நிரூபிக்க முடியும்.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மையப்படுத்தி, வியாபாரங்களை குறி வைத்தே இதன் நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஹெல உறுமயவுக்கு எவ்வாறு இன்று செல்வாக்கு அழிந்து காணப்படுகின்றதோ அதே நிலைதான் பொதுபலசேனாவுக்கும் ஏற்படும் என்பதை விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.
99 வீதமான சிங்கள சகோதரர்கள் இந்த அமைப்பின் செயற்பாட்டை விரும்பவில்லையென்பதே உண்மை. அதிலும் புத்திஜீவிகளும், கல்விமான்களும் இத்தகைய அமைப்புக்கள் மீது வெறுப்பு நிலை கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இவ்வமைப்பின் மீது கடும் விசனம் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு நன்மையொன்றை இந்த அமைப்பு செய்துள்ளதென்றே சொல்ல வேண்டும்.
ஹலால், ஹறாம் என்னவென்று தெரியாதிருந்தவர்களுக்கு இப்பிரச்சினையின் பின் அறிந்து கொள்ளக்கூடிய நன்மை செய்துள்ளது இவ்வமைப்பு.

உலக மயமாக்கல் தொழில் நுட்ப புரட்சி காரணமாக இன்றைய பல்தேசிய கம்பனிகள் பன்றிக் கொழுப்பு எலும்பு ஜெனற்றின் போன்ற பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகின்றன. பல சர்வதேச நிறுவனங்கள் இந்த சம்பவங்களுக்குப் பிறகு சாதாரண பொது மக்களும் கண்டு பிடித்து பொருட்களை வாங்கக்கூடிய விழிப்புணர்வை இந்த நிகழ்ச்சிகள் கொண்டு வந்திருக்கின்றன.
முஸ்லிம் மக்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியங்களையும் உடைகளையும் சுதந்திரமாகப் பின்பற்ற முடியும் என்பதற்கு சர்வதேச அளவில் வழக்கு தீர்ப்புண்டு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பர்தா அணிதல் என்பது மார்க்கத்துடன் சம்பந்தப்பட்ட விடயம்.
ஹலால் சான்றிதழ் தேவையில்லையென்பது வேறு ஹலால் உணவு உண்ணக்கூடாது என்று யாருமே சட்டம் போட முடியாது. அது போலவே பர்தா அணியக் கூடாது என யாரும் சட்டம் கொண்டு வர முடியாது.
இலங்கைக்கு அண்மைக் காலமாக வரும் உல்லாசப் பயணிகளில் 30 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என்பதை புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

சார்க் நாடுகளில் மாத்திரம் 300 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அமைப்பில் அங்கமாக விளங்கும் இலங்கை தன்னுடைய பொருளாதார பலத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ள முடியும்.
இலங்கை வாழ் மக்களில் 5 மில்லியன் பேர் வெளிநாடு சென்றுள்ளார்கள். இதில் 25 வீதமான சிங்கள மக்கள் மத்திய கிழக்குக்கு வேலை தேடிச் செல்கின்றார்கள். அரபு நாடுகளுக்கும் இலங்கைக்குமிடையே நெருக்கமான தொடர்புகளும் நீண்ட வரலாறுகளும் உள்ளன.
பொதுபலசேனா போன்ற அமைப்புக்களும் அதன் பின்னணியில் இருந்து கொண்டு இயங்கி வருகின்றவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது நாட்டுக்கு அவர்கள் செய்யும் பாரிய துரோகமாகும். இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளும், மக்களும் தமது சமூகத்தின் நன்மை கருதி ஒன்றுபட வேண்டிய காலத்தின் கட்டாய தேவையாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்த ஒற்றுமை விடயத்தில் அரசியல் தலைவர்கள் மாத்திரமல்ல, மார்க்க அமைப்புக்கள் கூட ஒருமித்து நின்று குரல் கொடுக்க வேண்டிய தேவை வந்துள்ளது.

No comments:

Post a Comment