Sunday, May 19

இரு வருடங்களுக்கென மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை

siraz meyor kalmunaiகல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீராசாஹிப் நவமணிக்கு வழங்கிய செவ்வி
கேள்வி: எப்போது அரசியலில் பிரவேசித்தீர்கள்?
பதில்: 2011 ஆம் ஆண்டில் நான் திடீரென அரசியலில் பிரவேசித்தேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரிலும் மேலும் பிரமுகர்கள், பொதுமக்களின் வேண்டுகோளினை அடுத்தும் அரசியலில் பிரவேசிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டேன். க.பொ.த சாதாரண தரம் படிக்கும் போதே எனக்கு சமூக சேவையில் ஆர்வமிருந்தது.
எனது ஆசான்கள் அப்போது நான் அரசியலில் பிரவேசிப்பது பற்றியும் பேசினார்கள். அது 2011 இல் நனவாகியது. கட்சிக்குப் புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இளம் அரசியல்வாதிகள் தோற்றம் பெற வேண்டுமென கட்சித் தலைவர் அப்போது விரும்பினார். அதேநேரம் அக்காலத்தில் சம்மாந்துறைக்கென பிரதிநிதியொருவரும் இருக்கவில்லை. இதனால் மக்களின் பெரு விருப்புடன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன்.
கேள்வி: தேர்தல் வெற்றி பற்றி?
பதில்: 2011ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினைக் கட்சித் தலைமைத்துவம் எனக்குப் பெற்றுத் தந்தது. கட்சி எனக்கு வழங்கிய மிகப் பெரும் கௌரவமாக நான் இதனைக் கருதினேன். அரசியலில் பிரவேசித்து 45 நாட்களுக்குள் 16800 என்ற மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வெற்றியீட்டினேன். 2011 ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல்வராகவும் பதவியேற்றேன்.

கேள்வி: மாநகர முன்னேற்றப் பணிகள் பற்றி?
பதில் : முதல்வர் பதவியை முதன் முறையாகப் பொறுப்பேற்று கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் பல சாதனைகளைக் கூடப் புரிந்து மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாநகர சபையின் அதிகாரங்கள் முதல்வரின் அதிகாரங்கள் என்பனவற்றை மக்கள் மயப்படுத்தி மக்களால் பேசப்படும் முதல்வராக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் கல்முனை மாநகரை சகல வகையிலும் முன்னேற்றம் கண்ட நகராக மாற்றியமைப்பதே எனது கனவாகும். அதற்கான மாதிரி வேலைத் திட்டமும் என்னிடமுள்ளது.
கேள்வி: மாநகர முதல்வர் தேர்வில் பிரச்சினைகள் எழுந்தனவே?
பதில்: ஆம், எனக்கு முதல்வர் பதவி தரக் கூடியதென்ற வாதம் கட்சிக்குள் வலுப்பெற்றிருந்தது. கட்சிக்குள் 30 வருட காலத்துக்கும் மேற்பட்ட அனுபவமிக்க அரசியல்வாதிகள் இருக்கையில் நேற்று வந்த ஸிராஸுக்கு முதல்வர் பதவியா என்ற ஆதங்கமும் அதிகமானோரிடம் இருந்தது. நான் அதிக விருப்பு வாக்குகள் பெற்றவன் என்ற வகையில் என்னையே முதல்வராக நியமிக்க வேண்டுமென சாய்ந்தமருது மக்களும், ஏனையோரும் பலத்த குரலெழுப்பினார்கள். அந்தக் குரலுக்கு கட்சித் தலைமை செவிசாய்த்தது. ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து என்னை முதல்வராக நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்தது.
கேள்வி: தற்காலிகமாகவே முதல்வர் பதவி தரப்பட்டதாமே?
பதில்: முதல்வர் பதவி தரப்பட்ட போது இது தற்காலிகமானதொரு தேர்வு. பின்பு இது பற்றிப் பார்த்துக் கொள்வோம் என கட்சித் தலைமை தெரிவித்தது. இரண்டு வருடகாலத்துக்குப் பதவியில் இருங்கள். பின்னர் அதுபற்றி நாம் பேசிக் கொள்வோம் எனத் தலைவர் அப்போது சொ ன்னார். இது தொடர்பான ஒப்பந்தங்கள் எதிலும் நான் கைச்சாத்திடவில்லை.
கேள்வி: இரண்டு வருட காலத்துக்குப் பிறகு முதல்வர் மாற்றப்படுவாரா?
பதில்: அது கட்சி எடுக்க வேண்டிய முடிவு. கட்சியும் மக்களும் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்பட்டு நடப்பேன். கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் எந்த விடயத்திலும் அவசரப்படமாட்டார். திடீரென முடிவுகளை எடுக்க மாட்டார். ஆறஅமர யோசித்து நிலைமைகளை ஆராய்ந்து சகலரும் திருப்திப்படக் கூடியவாறு நிதானமாக தீர்மானங்களை அவர் மேற்கொள்வார். தலைவரின் இச்செயற்பாடுகளை நான் பலமுறை அவதானித்துள்ளேன். அத்தோடு, மக்களும் எனது பணிகளில் திருப்தி கண்டுள்ளனர்.
இந்நிலையில் தலைமைத்துவமும் மக்களும் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை என்னிடமுள்ளது. எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்குண்டு. மக்கள் இரண்டு வருட காலத்துக்கு என எனக்கு வாக்களிக்கவில்லை. அவர்களது கருத்துக்கும் கட்சி மதிப்பளிக்க வேண்டும்.
கேள்வி: இரண்டு வருட காலத்துக்குள் உங்களை வெளியேற்ற சதி நடக்கிறதாமே?
பதில்: இரண்டு வருட காலத்துக்குள் என்னை முதல்வர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற சதி நடக்கின்றது. காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இவ்வாறு செயற்படுகின்றனர். மாநகர சபையின் ஒரு சில பிரதிநிதிகளைத் தூண்டிவிட்டு மாநகர சபையின் பணிகளைக் குழப்பி என்னை வெளியேற்ற முடியுமென பகற்கனவு காண்கின்றனர்.
மாநகரினை முன்னேற்றுவதற்கு நான் மேற்கொண்டுள்ள பணிகளை கட்சியின் சக உறுப்பினர்களே பாராட்டுகின்ற வேளை காழ்ப்புணர்ச்சி கொண்ட எமது கட்சியின் ஒரு சிலர் என் மீது சேறு பூசி வெளியேற்றுவதற்கு எத்தனிக்கின்றனர். நான் ஒன்றரை வருட காலத்தில் மேற்கொண்டுள்ள மிகச் சிறந்த பணிகள் பற்றி இவர்கள் பேசுவதில்லை. குறைகளை காண்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கேள்வி: கட்சித் தலைமையுடன் இது பற்றிக் கலந்தாலோசித்தீர்களா?
பதில்: ஆம், கடந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. கல்முனை, மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 11 மு.கா உறுப்பினர்களும் கல்முனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.
கேள்வி: அங்கு என்ன முடிவு எடுக்கப்பட்டது?
பதில்: தலைவர் இங்கு மாநகர சபையில் நலன் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். முதல்வருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். பிரச்சினைகள் இருப்பின் முதல்வர் மூலம் அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். முடியாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் தலைமைத்துவத்தை நாட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வழிமுறைகளை விடுத்து ஊடகங்களுக்கு சுயமாக அறிக்கை விடுவதனால் சுயமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தலைமைத்துவம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் உறுதிபடத் தெரிவித்தார். உறுப்பினர்களின் பிரச்சினைகள், தேவைகள் இருப்பின் அதனைச் செய்து கொடுக்குமாறு தலைவர் எனக்குப் பணிப்புரை விடுத்தார். தலைவரின் பணிப்புரைக்கமைய நான் செயற்படுவேன்.
கேள்வி:எதிர்க் கட்சியின் ஆதரவு எப்படி?
பதில்: கல்முனை மாநகர சபையைப் பொறுத்தவரை எனது பணிகளில் எதிர்க் கட்சியினர் திருப்தியடைந்துள்ளனர். எனது செயற்பாடுகளை அவர்கள் முழுமையாக அங்கீகரிக்கின்றனர். ஆயினும் கட்சியைச் சேர்ந்தவர்களும் கூட எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரே சிறிய பிரச்சினைகளைக் கூட பெரிதுபடுத்துகின்றனர். குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர். எனினும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் சதி முயற்சி தோல்வியிலேயே முடிந்து விடும்.
கேள்வி: கல்முனை மாநகரம் பற்றி?
பதில்: மூவின மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மாநகரம் கல்முனை. ஏழு முக்கிய கிராமங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய நகரம். ஏறத்தாழ 110,000 மக்கள் நகரத்தில் வாழ்கின்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், தமிழர்கள் அடுத்த படியாகவும், சிறுதொகை சிங்களவர்ளும் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.
கேள்வி: பிரதேச வாதம் பிரச்சினைக்குக் காரணமா?
பதில்: இப் பகுதியில் பிரதேசவாதம் தலைவிரித்தாடுவது கவலை தருகிறது. நான் சிறு வயது முதல் கொழும்பிலும், அதன் பின் மேற்படிப்புக்காக வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தேன். இதனால், பிரதேச வாதம் குறித்து நான் அதிகம் தெரிந்திருக்கவில்லை. அரசியலில் பிரவேசித்த போதே பிரதேசவாதம் பற்றி அறிந்தேன்.
கேள்வி: கல்முனை மாநகரை முன்னேற்றும் திட்டமுண்டா?
பதில்: ஆம், நிர்வாகத்தை சீர்செய்துள்ளோம். வரிகளை சீராக அறவிடும் திட்டத்தினை வகுத்துள்ளேன். இதன்மூலம் கடந்த ஒன்றரை வருடத்துக்குள் இரண்டரைக் கோடி ரூபாவினை நிலையான வைப்பில் இட்டுள்ளேன். சபையின் முன்னேற்றத்துக்காக காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை பணியாற்றுகின்றேன்.
பாராட்டு விழாக்களை நடாத்தியிருக்கிறேன். தொழில் வாய்ப்பு வழங்கியிருக்கிறேன். நூலகங்களை வளப்படுத்தி தர முயர்த்தியிருக்கின்றேன். நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒன்றிணைந்து அழகான நகராக கல்முனையைக் கட்டியெழுப்பத் திட்டமிட்டுள்ளேன். இதற்கான மாதிரித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை முன்னெடுக்க 1015 வருடங்கள் கூடச் செல்லலாம். என்றாலும் நகர அபிவிருத்திக்கான கட்டமைப்புத் திட்டமொன்றினை நாம் கொண்டிருக்க வேண்டும். அதனை நாம் தற்போது தயாரித்துள்ளோம்.
கேள்வி: கட்சிக்கும் உங்களுக்கும் பிரச்சினைகளுண்டா?
பதில்:எனக்கும், கட்சிக்கும் எத்தகைய பிரச்சினைகளும் கிடையாது. கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாகவே செயற்பட்டு வருகின்றேன். என் மீதும் கட்சி நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கைக்குப் பங்கமில்லாத வகையில் கட்சி முன்னேற்றத்துக்கு என்றும் பாடுபடும் செயல் வீரனாக நான் இருப்பேன்.
கேள்வி: மாநகர உறுப்பினர்கள் எதற்காக உங்களோடு மோதுகிறார்கள்?
பதில்: நான் இன, மத பேதமின்றி சகலருக்கும் சேவையாற்றுகின்றேன். அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தமிழ் கிராமங்களுக்கு நள்ளிரவு 12.00 மணிக்குக்கூடச் சென்று தேவையான நலன் பேணும் செயற்பாடுகளை முன்னெடுத்தேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் திட்டங்களுக்கும் நான் முடியுமான உதவிகளைச் செய்வேன். எமது உறுப்பினர்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. இதனால் என்மீது சேறு பூசுகிறார்கள்.

No comments:

Post a Comment