Monday, July 1

கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூடப்படுமா..?

    கல்முனையில் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் தமிழ் மொழி பேசும் மக்களின் நன்மை கருதி திறந்து வைக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலக நடவடிக்கைகளில் பெரும்பாலானவை மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டு இந்த அலுவலகத்தின் நடவடிக்கைகளில் பெரும்பாலானவை அம்பாறை மாவட்ட அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் திட்டமிட்ட சதி போன்று கல்முனை மாவட்ட அலுவலகம் தற்போது உப அலுவலகமாக படியிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து இம் மாவட்ட தமிழ் மொழி பேசும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
    
  இந்த சதி செயல்பாடுகள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்லிம், தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எவரும் இல்லையா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
    கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி அம்பாறை மவட்டத்தின்  கரையோரப் பிரதேசங்களான நாவிதன்வெளி, சம்மாந்துறை, கல்முனை தமிழ் பிரிவு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில்,  பொத்துவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகம் முன்னாள் வீடமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களினால் கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.
    இவ் அலுவலகத்திற்கென தமிழ் மொழி பேசும் மாவட்ட முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார். வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டிருந்தது. சுனாமிக்குப் பின்னர் இவ் அலுவலகத்தால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மானிக்கப்பட்டு குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதுடன் இது தொடர்பான வீடமைப்புக் கடன் பெறல் உட்பட பல்வேறு நன்மைகளையும் இப்பிரதேச மக்கள் பெற்று வந்தனர்.
    இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு வந்த இவ் அலுவலகத்தின் மாவட்ட முகாமையாளர் இடமாற்றம் செய்யப்பட்டு அலுவலத்தின் செயற்பாடுகளில் பெரும்பாலானவை நிறுத்தப்பட்டு அம்பாறை மாவட்ட அலுவலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இவ் அலுவலக வாகனம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட முகாமையாளருக்குப் பதிலாக புதியவர் எவரும் இவ் அலுவலகத்திற்கு இதுவரை நியமிக்கப்படாமல் அம்பாறை மாவட்ட முகாமையாளரே இப் பிரதேச மக்களின் கோவைகளுக்கும் ஒப்பமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
    தற்சமயம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகமாக செயல்பட்டு வரும் கல்முனை அலுவலகத்தை தமிழ் மொழி பேசும் முஸ்லிம், தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் முழுமையான செயல்பாடுகளைக் கொண்ட மாவட்ட அலுவலகமாக செயல்படுத்துவதற்கு இம் மாவட்ட அரசியல்வாதிகள் ஒன்று பட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment