Tuesday, May 31

தென்கிழக்கு பல்கலை இரு மாணவர்கள் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தம்



(றிப்தி அலி, ஹனீக் அஹமட்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பல்கலைக்கழக நடவடிக்கைகளிலிருந்து மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று திங்கட்கிழமை தென் கிழக்கு  பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது மாணவர்கள் சிலர் எதிர்ப்புக் கூச்சலிட்ட சம்பவம் தொடர்பிலேயே மேற்படி மாணவர்கள் இருவரும் பல்கலைக்கழக நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல்கலைக்கழகத் உப வேந்தர் இஸ்மாயிலிடம் நாம் கேட்டபோது, அவர் நமக்குத் தெரிவிக்கையில்,

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் பெயருக்குக் களங்கத்தினை ஏற்படுத்துவதற்கும், பல்கலைக்கழகத்தின் நிருவாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கும் பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவிகளிலுள்ள சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இவ்வாறானவர்களின் தூண்டுதலின் பேரில் அவ்வப்போது ஒரு சில மாணவர்கள் பிழையான செயற்பாடுகளுக்குத் தூண்டப்படுகின்றனர். அதில் ஒரு சம்பவம்தான் நேற்று இடம்பெற்றதாகும்.

உயர்கல்வி அமைச்சர் எமது பல்கலைக்கழகத்துக்கு நேற்று வந்த போது, மேற்சொன்ன பதவியிலுள்ளவர்களால் தூண்டி விடப்பட்ட மாணவர்கள் சிலரே கூக்குரலிட்டதாக அறிய முடிகிறது.

எனவே, இச் சம்பவத்தோடு தொடர்புபட்ட இரண்டு மாணவர்களையும் மூன்று மாதங்களுக்கு பல்கலைக்கழக நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தியுள்ளோம்.

இதன்போது இவர்கள் மீது பல்கலைக்கழக நிருவாகம் விசாரணையொன்றினை மேற்கொள்ளும். அந்த விசாரணையின் முடிவுகளுக்கிணங்க நாம் தீர்மானங்களை மேற்கொள்வோம் என்றார்.

No comments:

Post a Comment