Tuesday, July 5

தீ விபத்து குறித்து அறிவித்து 2 மணித்தியாலங்களின் பின்னரே தீயணைப்பு பிரிவினர் வந்தனர்-Govt. Service comedies



கல்முனை நகரில் தீ விபத்து ஏற்பட்ட போது, தாம் - உடனடியாக அருகிலிருந்த மாநகர சபையின் கீழ் இயங்கும் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவித்தும் இரண்டு மணி நேரம் தாமதித்தே உரிய இடத்துக்கு தீயணைப்பு பிரிவினர் வருகை தந்ததாக பாதிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் கல்முனை நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்கிருந்த இரண்டு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆடை விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கையில்


'எனது கடையில் தீப் பிடித்துள்ளதாக எனக்கு அதிகாலை 4.30 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. உடனடியாக நான் ஸ்தலத்துக்கு விரைந்தேன். வந்தவுடன் கல்முனை மாநகர சபையின் கீழுள்ள தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தேன். ஆனால், அவர்கள் மிகவும் காலதாமதமாக – கிட்டத்தட்ட 6.30 மணியளவிலேயே உரிய இடத்துக்கு வந்தனர்.

தீயணைப்பு பிரிவினர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சொற்ப நேரமே தீயை அணைக்கும் முகமாக நீரை பாய்ச்சினர். பின்னர் நீர் முடிந்து விட்டது என்றார்கள். பின்னர், நீரை எடுத்துவரும் வாகனத்துக்கு எரிபொருள் தீர்ந்துவிட்டது என்றார்கள். அதன் பிறகு வாகனத்தின் டயர்கள் காற்று இழந்து விட்;டதாகக் கூறினர். இப்படி பல காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் அறிவித்த உடன் தீயணைப்பு பிரிவினர் ஸ்தலத்துக்கு வருகை தந்து – தீயைக் கட்டுப்படுத்தியிருந்தால் ஆகக்குறைந்தது, எனது விற்பனை நிலையத்திலிருந்த அரைவாசி பொருட்களையாவது காப்பாற்றி இருக்கலாம்' என்றார்.

தீயினால் சேதமடைந்த புத்தக விற்பனை நிலையத்தின் உரிமையாளரும் மேற்படி புகாரை எம்மிடம் கூறியதோடு, இந்த தீ விபத்து இடம்பெற்ற போது, கல்முனை பொலிஸாரே தமக்கு முழுமையான உதவிகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் நாம் கல்முனை மாநகர சபையின் செயலாளரும், நிருவாக உத்தியோகத்தருமான எம்.ஏ.எம். அலாவுதீனை தொடர்புகொண்ட போது, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேற்படி தீ விபத்துத் தொடர்பில் எமக்கு காலை 5.35 மணியளவிலேயே தகவல் கிடைத்தது. எனினும் சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் பிரிவினர் 55 நிமிடங்கள் தாமதமானமை தொடர்பில் நாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.

அதேவேளை, கல்முனை மாநகர சபையின் கீழுள்ள தீயணைப்பு பிரிவுக்கென தனியான ஆளணியினர் இல்லை.

தீயணைப்புப் பிரிவுக்கென தனியான ஆளணியினரை நியமிப்பதற்குரிய அங்கீரத்தைப் பெற்றுக் கொள்வதற்குரிய கோரிக்கை ஆவணங்களை மேலிடத்துக்கு அனுப்பியுள்ளோம். இதுவரை அதற்கான பதில்களும் கிடைக்கவில்லை' என்றார்.

கல்முனை மாநகர சபைக்கும் தீ விபத்து இடம்பெற்ற இடத்துக்கும் இடையில் சுமார் 200 மீற்றர் தூரமே காணப்படுகின்றது. இன்றைய தீ விபத்து காரணமாக இரண்டு கடைகளுக்கும் சுமார் பல மில்லியன் ரூபா கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment