Thursday, July 28

சாய்ந்தமருது பொது நூலகத்தின் குறைகளை நிவர்த்தி செய்து கல்வி வேட்கையைத் தீர்க்குமாறு பிரதேச வாசிகள் வேண்டுகோள்


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம் போதிய வசதிகளற்ற நிலையில் இயங்குவதனால் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரினால் திறந்துவைக்கப்பட்ட இப்பொது நூலகம் சுமார் 25 வருடகாலம் பழமை வாய்ந்தது. இவ்வாறான கட்டிடம் இதுவரை புனர்
நிர்மாணம் செய்யப்படவில்லை. இதேவேளை சுனாமி பேரலைத் தாக்கத்தின் பின்னர் கடற்கரை வீதியிலிருந்து முற்றாக சேதமடைந்த சாய்ந்தமருது வைத்தியசாலை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் என்பன சிலகாலங்களாக நூலகக் கட்டிடத்தில்   தற்காலிகமாக இயங்கிவந்தது. பின்னர் அவை சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றப்படட நிலையில், நூலகக் கட்டிடத்தை குறைந்தது அழகுபடுத்தும் முயற்சிகூட செய்யப்படாமல் பழுதடைந்த நிலையில் காட்சியளிக்கின்றது.

சாய்ந்தமருது பொது நூலகத்தில் வைத்தியசாலை இயங்கிவந்த காலப்பகுதிக்கான வாடகை சுமார் 20 இலட்சம் ரூபாவை அப்போது கல்முனை மாநகர மேயராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியினால் பெற்றுக்கொடுப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொது நூலக அபிவிருத்திக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இந்நூலகத்தின் அபிவிருத்திக் குழுவினரின் அயராத முயற்சியினால் இப்பொது நூலகத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தின் அரசியல்வாதிகள் அணைவருக்கும் இது விடயமாக அறிவிக்கப்பட்டும் இதுவரை பூரணமாக புனர் நிர்மாண வேலைகள் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்போது பிரதேச வாசிகள் இடவசதியற்ற நிலையில் வாசிகசாலையைப் பயன்படுத்துவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். இருக்கின்ற நூல்களை காட்சிப்படுத்துவதற்கு முடியாமல் அவை மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட தரப்பினர் சாய்ந்தமருது பொது நூலகத்தின் குறைகளை நிவர்த்தி செய்து மாணவர்கள், பிரதேச மக்களின் கல்வி வேட்கையைத் தீர்க்குமாறு பிரதேச வாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




No comments:

Post a Comment