Monday, May 7

கிழக்கு மாகாண தேர்தலை நடத்துவது குறித்து நாளை ஜனாதிபதி தலைமையில் உயர் மட்டக் கூட்டம்!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஜனாதிபதி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் சில தினங்களுக்கு முன் நடத்திய பேச்சை அடுத்தே கிழக்குத் தேர்தல் குறித்த இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவிருக்கிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முற்கூட்டியே நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கும் உயர் மட்டக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஆகியோருக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கிழக்கு மாகாண சபையில் அண்மையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட கிழக்கு மாகாணத் தேர்தலை முற்கூட்டியே நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை ஜனாதிபதியுடனான நாளைய சந்திப்பின்போது கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதியிடம் கையளிப்பார் எனவும் கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க கிழக்குத் தேர்தலை முற்கூட்டியே நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தனது இணக்கத்தை பிள்ளையான் வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அதேநேரம் சில நிபந்தனைகளை அவர் முன்வைத்துள்ளார் என்றும் நம்பகரமாகத் தெரிய வருகின்றது. இந்த நிபந்தனைகளை ஜனாதிபதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வார் என உத்தரவாதமளித்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment