Monday, March 25

இந்த நாட்டில் ஒவ்வொரு மதத்தவரினதும் சமயங்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களது கலாசாரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். சம்மாந்துறையில் ஜனாதிபதி.

நாட்டில் ஒவ்வொருவரும் தத்தமது மதம், கலாசாரம் தனித்துவத்தைப் பாதுகாப்பது போன்றே நாட்டிற்கே உரித்தான பொது கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாப்பதில் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.முன்னேறிச் செல்லும் உலகத்தோடு நாமும் இணைந்து முன்னோக்கிச் செல்வது முக்கியமென தெரிவித்த ஜனாதிபதி; மாணவர்கள் நவீன உலகிற்குள் பிரவேசிக்கத் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கணனி மையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல. சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப் பாளருமான ஏ. எம். எம். நெளஷாட் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
சம்மாந்துறைக்கு விஜயம் செய்து அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் கணனி மையத்தை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
உலகம் முன்னோக்கிச் செல்லும்போது அதனோடு இணைந்து நாமும் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம் என்பதை நான் மாணவர் சமுதாயத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
 
கடந்த 30 வருடங்களாக நாட்டில் குறிப்பாக இப்பிரதேசங்களிலும் நிலவிய மோசமான அச்சுறுத்தலான சூழல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சுதந்திரமாகக் கற்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டு ள்ளது.
இத்தகைய சூழலில் நான் மாணவர்க ளிடம் கேட்டுக்கொள்வது என்னவெனில், நவீன உலகுக்குள் நீங்கள் பிரவேசிப்பது முக்கியம், தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி நாம் ஒரு நாட்டின் மக்களாக இணைந்து நாட்டைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதற்கு நாம் தயாராக வேண்டும் என்பதே.
இந்த நாட்டில் ஒவ்வொரு மதத்தவரினதும் சமயங்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களது கலாசாரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தோடு நாட்டுக்கு உரித்தான கலாசாரத் தனித்துவத்தையும் அனைவரும் இணைந்து பாதுகாப்பது முக்கியமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முஸ்லிம் மக்கள், மாணவர்கள். முஸ்லிம் பிரமுகர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி கல்வியே நமது பெரிய செல்வம் அறிவே மகத்தான ஆயுதம் என தெரிவித்தார்.
மாணவர்கள் சிறப்பாகக் கல்வி கற்று முன்னேற வேண்டும். அதுதான் எமது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும். அதற்கான ஆசிகளை வழங்குவதில் மகிழ்ச்சியடை கிறேன் எனவும் மேலும் தெரிவித்தார்.
மேற்படி கணனி மையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த ஜனாதிபதியை மாணவர்கள் இஸ்லாமிய கலாசார முறைப்படி வரவேற்றனர். இந்த கணனி மையத்திற்கான அடிக்கல்லை கடந்த வருடம் ஜுலை மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாட்டி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


 

No comments:

Post a Comment